|
திருவறம் வளர்க - 'ஜீவபந்து' திருநாமம் வாழ்க
அன்புடையீர்,
வணக்கம், நமது சமண சமயம் மிக மிகத் தொன்மையானது. நமது தமிழ்த்திருநாட்டில் அது பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பு இருந்தே அறவோர் நெஞ்சங்களில் ஆட்சி செய்து வந்துள்ளது. கடல் கொள்ளப்பட்ட பழந்தமிழகத்திற்கூட சமணம் சான்றோர் நெஞ்சங்களில் வீற்றிருந்துள்ளது. பழந்தமிச் நூலாகிய தொல்காப்பியத்தும் அதற்கு முந்திய அகத்தியத்தும் கூட இந்த வரலாற்று உண்மையை எளிதில் உணரலாம்.
அருமைத் தமிழ்மொழியிலே திருவறம், திருவறம் எனப்புகழப் பெற்ற இந்த சமணத்திற்கு - தமிழ்ச்சமணத்திற்குத் தொல்லறம், நல்லறம், அருளறம் எனவும் கூடப்பெயர்கள் உண்டு. இந்நாள் மதுரையே அந்நாள் தொட்டு இதன் தலைமைத் தலமாக இருந்து வந்துள்ளது. பரங்குன்று முதலாகப் புகழ் வாய்ந்த சமணர்கள் மலைகள் எட்டும் தன்னைச் சூழ விளங்கியதும், விளங்குவதும் இந்த மதுரையே.
இந்த வெற்புகளில் வாழ்ந்த நம் அறவோர்கள் பல்லாயிரவர் அவர்களை போற்றிய பாண்டிய மன்னர்களும் பல நூற்றுவர். அவர்கள் தலைமை ஏற்க எழுந்த சமண நல்நூற்களும் கணக்கற்றன. அகத்தியமும், காப்பியமும், பதினென்கணக்கின் பலவும், திருக்குறளும், சிந்தாமணியும். இது போன்ற நல்நூற்கள் பலவும் விளைந்தது இம்மதுரையேயாகும். கி.பி.470ல் திராவிட சங்கம் எனும் புகழ் பெற்ற தமிழ்ச் சமணச்சங்கம் தோன்றியதும் இம்மதுரையே.தமிழ்ச்சமணர்களாகிய நாம் நமது அரும்பெரும் தமிழ்த்திருவறம் நூல்களை மறந்தும் பிற சமய்த்தார்களிடம் பறி கொடுத்தும் நமது மாண்புகளை அறியாது வெறுமே வெற்று ஆரவாரச்சடங்குகளில் காலம் கடத்தியும், மித்தியாவாதிகளைப்போல இருந்து வருகின்றோம் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஓர் உண்மையாகும்.
இந்நிலையிலிருந்து தமிழ்ச்சமணத்தை விடுவிது உலகு எங்கும் அதன் புகழினை மீண்டும் பரப்பிடம் பாடுபட்ட நம் சமயப்பெரியோர்கள் அறவோர்கள் பலர் ஆவர். அவர்களிலே திரு.சக்கரவர்த்தி நயினார், ஜீவபந்துப்பெருமகனார், பூரணச்சந்திர சாஸ்திரியார், காஞ்சிபுரம் அனந்தநாத நயினார் முதலிய பெரியோர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள். இவர்கள் காட்டிய தொண்டாற்றிய அறநெறியிலே மேலும் தொண்டு ஆற்றிட மதுரையில் உதயமாகியுள்ளதே மதுரை சமண்ப் பண்பாட்டு மன்றம். சென்ற 25-7-93ல் ஜீவபந்து பெருமகனாரின் 93-வது ஜெயந்தி விழாவில் நமது சமயப்பெரியோர்கள் திரு.ஜெயவிஜயன் Er. திரு.சின்னத்துரை முதலியோர் தலைமை ஏற்க நம் சமயப் புலவர்கள் திரு.பானுராசனார், திரு.அறவாழி, திரு.தன்யகுமார், திரு.ஆதிராஜன் போன்ற அறிஞர் பெருமக்களும், பிற சமய அறவோர்களும் வந்து இருந்து வாழ்த்திட உதயமாகியதே இந்த தமிழ்ச் சமணர்கள் சங்கம் தற்பொழுது "மதுரை சமண்ப் பண்பாட்டு மன்றம்" என்று உருவாகியுள்ளது. இது,
1. மறைந்து போகும் நிலையில் உள்ள பழந்தமிழ் சமண நூற்களை அச்சிட்டு வெளியிடல்.
2. ஜீவபந்து பெருமகனார் எழுதி உள்ள நூல்களை அச்சு ஏற்றி இலவசமாகவே வெளியிடல்.
3. மாண்பார்ந்த திருவறத்து நெறிகளாகிய தமிழ்ச் சமண நெறிகளில் காலப் போக்கில் வந்து கலந்து விட்ட வெற்று ஆரவாரச் சடங்குகளை நீக்கிட பாடு படல்.
4. எவ்வுயிர்க்கும் அருளுடமை, இன்னா செய்யாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, மிகு பொருள் விரும்பாமை முதலாய தழிழ்ச் சமண அறங்களை மக்களுக்குத் தெரிவித்து அவ்வறங்களைப் பரப்புதல்
5. ஆண்டுதோறும் ஜீவபந்துப்பெருமகனார் அவர்கள் பிறந்த நன்னாட்களை சிறப்புறக் கொண்டாடுதல்.
6. திருவறத்துக்கு ஏற்புடைய பிற சமய நல்லறிஞர்களின் கருத்துக்களை, நூற்களைப் பாராட்டி வெளியிடுதல்
7. அறவழியில் உயிர்ப்பலிதடுப்புத் தொண்டு ஆற்றல்.
8. சமய வேறுபாடின்றி ஏழை மக்கட்கு உதவுதல்,கல்வி மருத்துவ உதவி முதலியன் செய்தல்.
9. தொன்மைச் சிறப்பு வாய்ந்த சமணத் தலங்களை திருமேனிகளைப் பாதுகாத்தல், அதன் அருமையை அனைத்து வழிகளிலும் உலகுக்கு உணர்த்துதல், மற்றும் இது போன்ற நற்றொண்டுகளை அறவழியில் முன்னின்று நடத்தும். இதனைக் கண்ணுறும் திருவறத்து அருமை வாய்ந்த பெரியார்களும், சமணத்து மறுமலர்ச்சி காண விழையும் இளைஞர்களும் மதி நலம் சான்ற தாய்மார்களும் தமிழ்ச் சமண அறநெறிகளைத் தம் வாழ்வில் ஏற்றுக் கொண்ட பிற சமய நல்லோர்களும் இந்த மதுரை சமண பண்பாட்டு மன்ற உறுப்பினராகித் தொண்டு ஆற்றிட இந்த மன்றம் மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றது.
திருவறம் வளர்க
திருவறம் Er.A.சின்னதுரை
தலைவர்
திருவறம் சொ.அனந்தராசு
செயலர்
தமிழ் மாமுனிவர் திரு.வி.க அவர்கள் அருளியது:
ஆதி பகவன்சோதி நான்
விருஷபதேவன் புருஷ நாயகன்
அவனே இறைவன் அவனே ஈசன்
அவனே மாயன் அவனே நான்முகன்
அவனே சித்தன் அவனே அருட்சினன்
அவனே தர்மம் அவனே அகிம்சை
அவனே அருகன் அருகே அணைந்தால்
விடுதலை வழியைக் கடிதில் பெறலாம்
அவனை எண்ணுவம் அவனை வாழ்த்துவம்
அவன்பணி ஆற்றுவம் அவன்நெறி ஓம்புவம்:
ஜைனம் எதுவெனச் சாற்றுவன் இங்கே:
ஐம்புலன் வெல்லும் செம்மை ஜைனம்
ஒழுக்கம் காக்கும் விழுப்பம் ஜைனம்
கொலைகளை வொழிக்கும் நிலைபெறல் ஜைனம்
கள்பொய் காமம் தள்ளல் ஜைனம்
ஊனுண்ணாத மேனிலை ஜைனம்
வெறிஆவேசம் முறியிடம் ஜைனம்
சாந்த அமுதம் மாந்தல் ஜைனம்
நல்லெணம் நன்மொழி நற்பணி ஜைனம்
பிறர்க்கென வாழும் திறத்துறை ஜைனம்
தேவை அளவை மேவல் ஜைனம்
அகிம்சா தர்மம் அனைத்தும் ஜைனம்:
இந்த ஜைனம் எந்த மதமோ?
மக்கட்குரிய தக்க பொதுமை
அகிம்சா ஜைனம் அகண்ட ஜைனம்
அகண்ட ஜைனம் அகிலமாக
வேண்டுவம் என்றும் வேண்டுவம் நாமே:
|  |
|